சுடுமணல்

Archive for the ‘விமர்சனம்’ Category

காதலா? கத்தரிக்காயா?

கத்னா குறித்தான சர்ச்சையும் இலக்கியச் சந்திப்பும் குறித்தான கலவரப்பாடுகளில் “இலக்கியச் சந்திப்பு மரபு” என்றொரு வார்த்தை பாவிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதுவும் தம்மை கலகக்காரர்கள்போல் பிம்பங்களைக் கட்டமைத்து, அதை பேண மல்லுக்கட்டுபவர்கள் இதை பேசுகிறபோது புன்னகையொன்றையே பதிலாகத் தரமுடிகிறது.

கலகக் குரல் என்பதே மரபுகளை மீறுவது, அதன் கெட்டிதட்டுகிற தன்மையை உடைத்துப் போடுவது, கட்டவிழ்ப்பது என்பதாக இருக்கிறபோது இவர்கள் 30 ஆண்டுகால இலக்கியச் சந்திப்பு மரபு என உச்சரித்தபடியே இருக்கிறார்கள்.

சகல அதிகாரத்துக்கும் எதிரான குரலாக, ஜனநாயகத்தன்மையை உயர்த்திப் பிடிப்பதாக, மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாக சொல்வது அல்லது இருப்பது என்பது மரபல்ல. அது கருத்துநிலை. பெரும்பாலும் சமூகசக்திகளால் ஏற்றுக்கொள்ளப்படுகிற ஒரு பொதுப் போக்கு. இதை எவ்வாறு செழுமையாக வைத்திருப்பதென்பதில் (கருத்து ரீதியிலும் நடைமுறையிலும்) கைக்கொள்கிற வழிமுறைகளை வேண்டுமானால் மரபு என சுட்டுதல் முடியும் என நினைக்கிறேன்.

இலக்கியச் சந்திப்புக்கு 30 ஆண்டு கால வரலாறு இருப்பதாக இன்று கொண்டாடும் நண்பர்கள் 47 சந்திப்புகளை கடந்த நிலையிலும் தனது அறிமுகத்தைக்கூட ஒரு சுயவிமர்சன தளத்தில் வைத்தது கிடையாது. ஒரே பாட்டுத்தான் பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஜனநாயக மனப்பாங்கின் ஒரு முக்கியமான உள்ளடக்கம் சுயவிமர்சனம் என்பது. அதில்லாதபோது தேய்ந்துபோன ஒரு றைக்கோர்ட் இல் ஊசியை மட்டும் மாற்றிக்கொண்டிருக்க வேண்டியதுதான். அதுவே நடந்துகொண்டும் இருக்கிறது.

பலவீனங்களை பலமாக கட்டமைக்கிற மனநிலையை The great dictator என்ற படத்தில் சார்லி சப்ளின் நகைச்சுவை மூலம் கட்டுடைத்துக் காட்டுகிறார். அது எமது தமிழீழ விடுதலைப் பொராட்ட தலைமைகளிடமும் நிலவிய மனநிலை. இலக்கியச் சந்திப்பில் நிர்வாகக் குழு இல்லாததை அதன் ஜனநாயகச் செழுமையாக கட்டமைக்கிற போலித்தனத்திலும் இதேதான் மனநிலை. எந்தவித வேலை முறையும் இல்லாத ஒரு அமைப்புக்கு நிர்வாகக் குழு எதற்கு? ஒரு பத்திரிகையை, சஞ்சிகையை, தொகுப்புகளை (வந்த மூன்று தொகுப்பும் அதிலிருந்த தனிநபர்களின் உழைப்பால் உருவாகியது) அல்லது சந்திப்பின் ஆய்வறிக்கைகளை குறிப்பெடுப்பது, தொகுப்பது, அதை நூலாக்குவது என எந்த வேலைமுறையும் இருந்ததில்லை. எதுவித பொரளாதார ஆதரவுக்கரங்கள்கூட வெளியில் எந்த இலக்கிய செயற்பாட்டுக்கும் வழங்கப்பட்டதில்லை. (இதையெல்லாம் சிறுசஞ்சிகைகளில் குறிப்பிடத்தக்கவை 80 களில் செய்த செயற்பாடுகள். தனிநபர்களும் செய்திருக்கிறார்கள்).

சபாலிங்கம் புலிகளால் கொல்லப்பட்டதுக்குக்கூட உடனடியாக ஒரு துண்டுப்பிரசுரத்தை தயாரித்து விநியோகிக்க முடியாத கட்டமைப்பே இருந்தது. (அதை சிறுபத்திரிகைகள்தான் செய்தன.). இதையெல்லாம் மறைத்து நிர்வாகக் குழு இல்லாமையை ஜனநாயக கட்டமைப்பாகக் காட்டுகிற பலவீனத்தை அதன் அறிமுகமாக தேய்த்துக்கொண்டிருப்பது சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

“பழைய தோழர்கள் என்றெல்லாம் ஒன்றில்லை. நாங்களும் பிறகு பழைய தோழர்களாகிவிடுவோம். இப்படியே மாறிக்கொண்டிருக்கும்” என கால அளவை வைத்து மட்டும் விளக்கம் கொடுக்கிற அதே வாய்தான் இலக்கியச் சந்திப்பின் 30 ஆண்டுகால மரபு எனவும் உச்சரிக்கிறது. சுவாசியமாக இல்லை?

லண்டனில் நடந்த 40வது இலக்கியச் சந்திப்பின்பின் வெளியேறியவர்களை இந்த கால அளவு விளக்கத்தால் கடந்துசெல்வது ஒரு மோசடி நிறைந்தது. இலக்கியச் சந்திப்பின் ஆரம்பகாலத்திலிருந்து அதற்காக நேர்மையாக உழைத்தது மட்டுமல்ல, நிதிரீதியில் கூட அவர்களில் சிலர் இழந்த இழப்புகளை அவளவு இலகுவில் மறந்துபோய்விடவா முடியும். 80 களின் நடுப் பகுதியில் உருவாகிய இலக்கியச் சந்திப்பில் 90 களின் நடுப் பகுதியில் இணைந்தவர்கள் நிழல் மேலாண்மைப்; பாத்திரம் வகித்துக்கொண்டு அடிக்கிற சவடால்களை நாம் கேட்டுத் தொலைக்க வேண்டியிருப்பது ஓர் அவலம். “பழைய தோழர்கள்” என்ற சொல்லாடல் எந்த இயக்கங்களிலும் அமைப்புகளிலும் கால அளவை ஒரு சுட்டுதலாக கொண்டாலும் அவற்றின் ஆரம்காலத்தில் அவர்கள் செலுத்துகிற கடும் உழைப்பையும் அர்ப்பணிப்புகளையும் உள்ளடக்கமாகக் கொண்ட வார்த்தைகளாக இருப்பவை.

மேற்கத்தைய நாடுகளில் வாழ்ந்துகொண்டே ஜனநாயக முறைமையின் ஒரு முரண்பாட்டை அணுகுகிற முறைமையில் எந்தளவு தூரம் இலக்கியச் சந்திப்பு முன்னேறிக் காட்டியிருக்கின்றன என பார்த்தால் திருப்திகரமாக இல்லை என சொல்வேன். 30 ஆண்டுகாலம் கடந்தும் அது நகர்த்திய இலக்கிய அரசியல் புலமை மட்டுமல்ல பக்குவம்கூட புகலிடத்தில் இலக்கியச் சந்திப்புக்குள்ளேயோ வெளியிலோ (நான் உட்பட) பெருமிதம் கொள்ள முடியாத நிலைதான் உள்ளது.

தமிழ்மனநிலையை விமர்சிக்கிற இவர்கள் அதே மனநிலையுடன்தான் இப் பிரச்சினையை அணுகியிருக்கிறார்கள். மேற்குலகில் மக்களுக்கு நன்மையளிப்பதாக அரசியலாளர்களோ சமூகப் புத்திஜீவிகளோ கருதுகிற ஒரு விடயம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு மக்களின் கருத்துக் கணிப்புக்கு விடப்படுகிறபோது அதை மக்கள் தோற்கடித்த சம்பவங்கள் உண்டு. ஒரு குறுகிய அல்லது நீண்ட கால அவகாசத்துடன் மீண்டும் அதே முன்மொழிவு மக்கள்முன் வைக்கப்படுகிறது. அதை மக்கள் புரிந்து ஏற்றுக்கொண்ட சம்பவங்களும் உண்டு, மீண்டும் நிராகரித்த சம்பவங்களும் உண்டு. இங்கு கவனிக்கப்பட வேண்டியது பெரும்பான்மை சிறுபான்மை பிரச்சினை என்பதற்கும் அப்பால், கொடுக்கப்படுகிற கால அவகாசம். தாம் நினைத்ததே சரி என அவர்கள் ஒரு திணிப்பை செய்யவோ அல்லது ஏதாவது வகையில் நடைமுறைப்படுத்தவோ முனைவதில்லை.

இவ்வாறிருக்க ஒரு மாற்று வடிவமாக உருவாக்கப்பட்டு தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்புக்குள் இந்த மனப்பாங்கு எவ்வாறு கடைப்பிடிக்கப்பட்டது. லண்டனில் நடந்த 40 வது இலக்கியச் சந்திப்பில் – அப்போதிருந்த இலங்கை அரசியல் சூழலை மையப்படுத்தி- ஏற்பட்ட பலமான முரண்பாட்டை எவ்வாறு கையாண்டிருக்க வேண்டும். எந்தத் தரப்பு சரியாக சிந்தித்தது எந்தத் தரப்பு பிழையாக சிந்தித்தது என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. இப் பிரச்சினையால் கட்டிக்காக்கப்பட்ட ஒரு அமைப்பு உடைந்துபோகிற அல்லது செயற்பாட்டாளர்களை இழந்துபோகிற நிலை வருகிறதெனில் என்ன செய்திருக்க வேண்டும். இலங்கைக்கு அப்போதைய சூழலில் இலக்கியச் சந்திப்பை எடுத்துச் செல்வதை ஒரு இணக்கப்பாடாக கைவிட்டு தொடர்ந்து தமது கருத்துக்காக அமைப்புக்குள் உரையாடல்களை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அந்த மனநிலையில் இது கைக்கொள்ளப்படவில்லை. அவர்களது அரசியல் அதற்கு இடம் கொடுக்கவில்லை. குழுநிலை இடம்கொடுக்கவில்லை.

இந்த ஜனநாயக முறைமையையே புரிந்துகொள்ளாதவர்கள் அல்லது புரிந்துகொள்ள மறுப்பவர்கள் எதை இலக்கியச் சந்திப்பு மரபு என சொல்கிறார்கள்?. அன்றைய சூழலில் இலங்கைக்கு இலக்கியச் சந்திப்பை கொண்டுசெல்லாமல் விட்டிருந்தால் ஒன்றும் கவிழ்ந்து கொட்டுப்பட்டிருக்காது. இப்போதையும்விட அது எல்லோரினது பங்களிப்புடனும் செழுமையான ஜனநாயக உள்ளடக்கத்துடனும் முன்னேறிக்கொண்டிருக்கும். மாறாக அதன் ஆரம்ப கால செயற்பாட்டாளர்களை இழந்ததுதான் நடந்து முடிந்திருக்கிறது. ஆக இலக்கியச் சந்திப்பின் மரபு என்பது வீம்பு என கொள்ளவேண்டியிருக்கிறது. அன்றை இலங்கை அரசியல் சூழலுள் இலங்கைக்கு கொண்டுபோகக்கூடாது (ராஜபக்ச அரசு இலங்கையில் ஜனநாயக சூழல் நிலவுவதாக காட்டுகிற படத்துக்கு கலர் அடிக்கக்கூடாது) என வைக்கப்பட்ட விவாதத்தை “இலக்கியச் சந்திப்பை இலங்கைக்கு கொண்டுபோகக்கூடாது” என மொழிபெயர்த்து, “இலங்கையிலென்ன கன்பொல்லையிலும் நடத்திக் காட்டுவோம்” என குரல்விட்டதன் பின்னால் இருந்தது ஜனநாயகப் பற்றா, வீம்பா? இதுதான் அவர்களின் மரபு.

இதையேதான் தற்போது கத்னா விடயத்திலும் பார்க்க முடிகிறது. இதுபற்றி இரண்டு தரப்பும் அளிக்கிற விளக்கங்களுக்கூடாக ஒரு தெளிவான புரிதலுக்கு வரமுடியாதுள்ளது. நபர் சார்ந்து பேச மறுத்தார்களா அல்லது விடயம் சார்ந்து பேச மறுத்தார்களா அல்லது இந்த உள்ளக மனநிலையுடன் செயற்பட்டார்களா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இப் பிரச்சினை ஏற்பாட்டுக் குழுவிலிருந்து முஸ்லிம் நண்பர்கள் வெளியேறிப் போவதற்கான நிலைமையை உருவாக்கியது எனில் பக்குவமாக அதை இலக்கியச் சந்திப்புக்கு வெளியில் கையாண்டிருக்க வேண்டும். எப்படியாவது இந்த விசயத்தை கொண்டு வரவேண்டும், நேரங்களை ஒதுக்கித் தருகிறோம் என ஒருபுறமும் “அதை எடுக்காமல் பின்வாங்கியது இலக்கியச் சந்திப்பு மரபுக்கு இழுக்கு” என வெளியிலிருந்து குரல் விடுவதுமான அணுகுமுறைக்குள் அதே வீம்புதான் மரபாக செயற்பட்டுள்ளது.

பேசப்படாத விடயங்களை பேசுவது என்பது சரியான விசயம். அருகிவருகிற ஒரு விடயமாக இருந்தாலென்ன, அருகி பின் இல்லாதொழிந்து போய்விட்ட ஒரு விடயமாக இருந்தாலென்ன அதுபற்றிப் பேசப்படுதல் தேவையற்றது என ஆகிவிடாது என்பது ஏற்றுக் கொள்ளப்படக் கூடியது, என்னளவில்! அதற்கான அணுகுமுறைதான் பிரச்சினைப்பாடாக இலக்கியச் சந்திப்பு “மரபில்” இருந்துவருகிறது என்பதற்கான இன்னொரு சாட்சி இந்த விவகாரம். ஒத்திப்போடல், கால அவகாசம், தொடர்ந்த கருத்துநிலை உரையாடலினூடு இணக்கப்பாட்டுக்கு வருதல் என்ற ஜனநாயக முறைமைகளில் இலக்கியச் சந்திப்பு இயங்கவில்லை. அது ஒருவித வீம்புடன் செயற்படுகிறது. அதற்குள் ஒரு நிழல் மேலாண்மை இழையோடுவதின் வெளிப்பாடாகவே இதை கொள்ள முடிகிறது.

அத்தோடு “புகலிட இலக்கியச் சந்திப்பா” அல்லது “இலக்கியச் சந்திப்பா” என தெளிவாக தனது எல்லையை வரையறுக்க முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது. இப்படியொரு மயக்கத்தில் உழலவிடுவது நிழல் மேலாண்மையின் மீதான காதலா, கத்தரிக்காயா?

– ரவி (05082017)

Advertisements

…ச்செறியும் நாவல் !

papilon cover-tamil
கென்றி சாரியரின் (Henri Charriere) “பட்டாம்பூச்சி” நாவல் எனது புத்தக அலுமாரியில் தனது சிறகொடுங்கி குந்தியிருந்து பல வருடங்களாகியிருந்தது. “சூரிச் – வாசிப்பும் உரையாடலும் 12” சோலையுள் இந்தப் பட்டாம்பூச்சியின் பறப்பை காண நாம் விழைந்தோம். ஒரு தொகை பக்கங்களில்அது தன் சுவடுகளை மெல்லப் பதித்தபடி பறந்துகொண்டிருந்தது. பல இலட்சக்கணக்கான பிரதிகளிலும் பல்வேறு மொழிகளின் வரிகளுக்குள்ளாலும் அது ஏன் பறந்தது என எழுந்த கேள்விக்கு இன்னமும் என்னிடம் பதிலில்லை. நூலை வாசித்து உரையாடியுமாயிற்று. இன்னும் பதிலில்லை. ரா.கி.ரங்கராஜனின் மொழியெர்ப்பு நாவலின் உள்ளுடனை ஊடுருவ முடியாமல் ஓரமாய் நடந்துகொண்டிருக்கிறதா எனவும் எண்ணத் தோன்றியது. எப்படியோ வரிகளுக்கிடையால் புகுந்து நடக்க வேண்டிய பொறுப்பு இந்த எதிர் அம்சத்தை தாண்டிச் செல்ல வைத்தது.

Read the rest of this entry »

– எனது வாசிப்பு

நாவல்களில் வெவ்வேறு விதமான பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றபோது அங்கே தனியானவொரு உண்மை மட்டும் இருப்பதற்கு இடமில்லை. வெவ்வேறு உண்மைகள் இருக்கும் சாத்தியம் உண்டு. அதை ஆசிரியர் கதை சொல்லலின்போது அங்கீகரித்தபடி அதற்குள்ளால் நகரவேண்டும். அதற்கு உண்மையில் ஒருவர் தனது கருத்தின் சார்புநிலையை அக் கணங்களில் துறக்க வேண்டியிருக்கும். தனது கருத்துசார் நிலையை தற்காலிகமாக அழித்துவிட்டு பாத்திரங்களின் கருத்துசார் நிலைக்கு மாறிக்கொண்டு எழுதுவது சுலபமானதொன்றல்ல. பொதுவில் தாம் சார்ந்த கருத்துநிலை இடையீடு செய்தபடியே இருக்கும். (எழுதுதலின்போது) அதைத் துறப்பது ஒருவித துறவு நிலைதான்.

Read the rest of this entry »

 

dheepan-group

– திரையொழுக்கு.

தீபன் படம் பிரான்சின் அறியப்பட்ட இயக்குநரான ஜாக் ஓடியார் அவர்களால் இயக்கப்பட்ட பிரெஞ்சுப் படம். 2015 இன் கன்னஸ் விருதான பல்மடோர் விருதை வென்றிருக்கிறது. படத்தின் நாயகன் தீபன், நாயகி யாழினி, குழந்தை இளையாள் ஆகியோரைச் சுற்றி கதை நகர்கிறது. சுமார் எண்பது வீதமும் தமிழிலேயே வசனங்கள் போகிறது. அதனால் தமிழ் ரசிகருக்கு அருகில் படம் வருவதை புரிந்துகொள்ள முடியும். இக் காரணங்களால் (ஒரு குறிப்பிட்ட வட்டத்துள்) தமிழர்களால் இப் படம் பற்றி பேசப்படுவதும் அதன் விருது பற்றி பெருமை கொள்வதும் நடந்தேறுகிறது. அது புரிந்துகொள்ளப்படக் கூடியது.

அப்படியிருந்தும்கூட தமிழக சினிமாக்களுக்கு அலையாகச் செல்லும் நிலைமைபோலன்றி, ஐரோப்பிய திரையரங்குகளில் பெரும்பாலான ஐரோப்பியர்களும் கொசுறளவான தமிழர்களும் இவ்வாறான படங்களை திரையரங்குகளில் பார்க்கும் நிலைதான் உள்ளது. பிரசன்ன விதானகேயின் “பிறகு“ (With You Without You) என்ற படத்தையும் 2014 இல் திரையரங்கில் பார்த்துக்கொண்டிருந்தபோது, தமிழர்கள் பக்கத்து திரையரங்கில் ஓடிய “கத்தி“ திரைப்படத்துக்கு அலையாய் வந்திறங்கிக்கொண்டிருந்தனர். இதுதான் நமது சினிமா இரசனையின் இலட்சணம். திரையரங்கில் தீபன் படத்தை பார்த்துக்கொண்டிருந்த சுமார் 60 பேரில் நாம் 4 தமிழர்கள்தான் இருந்தோம்.

Read the rest of this entry »

– எனது வாசிப்பு

malathi book

நியூசிலாந்தில் வசிக்கும் ந.மாலதி அவர்கள் எழுதிய நூல் இது. ஒரு ஆவணம் என சொல்லலாம். “விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசின் இறுதி நான்கு வருடங்கள்“ என அவர் குறிப்பிடுகிறார் இந்த நூலின் உள்ளடக்கத்தை. 240 பக்கங்கள் கொண்ட இந் நூலை விடியல் பதிப்பகம் 2013 இல் வெளியிட்டுள்ளது.

புலிகளை அரசியல் ரீதியில் விமர்சிக்கும் ஒரு தொகை எழுத்துக்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். இது மிக அவசியமானதும்கூட. அதேநேரம் அவர்கள் வன்னியில் நிகழ்த்திய நிழல் அரசொன்றின் உள் அமைப்புகள் எப்படி இயங்கின என்ற புரிதலை தனது பார்வையில் இந்த நூல் தருகிறது. இதை ஒரு முழுமையான ஆவணமாக கொள்ளத் தேவையில்லை என்றபோதும் நாம் உள்நுழைந்து பார்க்க வேண்டிய இடங்களை சுட்டிநிற்கிறது. இந்தவகையில் குறிப்பிடத்தக்க ஓர் அவணமாக இதை கொள்ள முடியும்.

Read the rest of this entry »

oolikkaalam-2“ஊழிக்காலம்“ மீதான எனது வாசிப்பு.

அண்மையில் வெளிவந்திருக்கும் ஒரு முக்கியமான போர்க்கால நாவலாக ஊழிக்காலத்தை சொல்ல முடியும். இந் நாவலை தமிழ்க்கவி என்ற பெண் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். 320 பக்கங்களைக் கொண்ட இந் நூலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

இந் நூல் வெளிவர காத்திரமான பங்களிப்புச் செய்த சயந்தன் தமிழ்க்கவியை (இந் நூலின் கடைசிப் பக்கத்தில்) இவ்வாறு அறிமுகமாக்குகிறார்.
“தமயந்தி சிவசுந்தரலிங்கம் (66) எனும் இயற்பெயர் கொண்ட தமிழ்க் கவி ஈழவிடுதலைப் போரில் தன்னையும் இணைத்துக்கொண்ட ஒரு மூத்த எழுத்தாளர். போராளிகளாலும் மக்களாலும் “மம்மி“ என்றும் “அன்ரி“ என்றும் அன்பாக அழைக்கப்பட்ட தமிழ்க்கவி ஈழப் போரில் உயிரை ஈந்த இரண்டு மாவீரர்களின் தாய்.“ என்கிறார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் வானொலி, வானொளி உட்பட அதன் கலையிலக்கிய தளங்களில் தன்னை ஈடுபடுத்தியிருந்ததால் தமிழ்க்கவி பலராலும் அறியப்பட்டிருந்தார். புலிகள் அமைப்பில் போராளியாக இருந்த அவரின் ஊழிக்காலம் நாவல் அந்தத் தளத்தில் இயங்கவில்லை. அப்படி இயங்கவேண்டும் என்பதுமில்லை.

Read the rest of this entry »

மறுப்பைப் பதிவு செய்தல் !

(குறிப்பு: வாசகர்களே ! இவ்வாறான ஒரு பத்தியை எழுத வேண்டி ஏற்பட்டது பிரயோசனமானதுதானா என எனக்குத் தெரியாது. இன்றைய முகநூல் போன்ற பொதுவெளியின் தன்மையை கவனத்தில் எடுத்து -2005 க்குப் பின்- திரும்பவும் ஒருமுறை இந்த மறுப்பை பதிவுசெய்ய வேண்டி ஏற்பட்டிருக்கிறது.)

சனநாயக்தின் காவலர்களில் ஒருவரான அசோக் அவர்கள் சபாலிங்கத்தின் படுகொலையில் சுவிஸ் மனிதம் குழுவினரை நோக்கி வந்திருக்கிறார். தனது முகநூலில் இதுபற்றிய முனகலுடன் தொடங்கிய குரல் நகர்ந்து வந்து மனிதம் குழுவிடம் வந்து, இறுதியில் எனது படலைக்கு வந்துசேர்ந்திருக்கிறது. உண்மைகளை கண்டறிவதிலுள்ள தீராத வேட்கையில் அசோக் இருக்கிறார். “எனக்கொரு உண்மை தெரிந்தாகணும்“ என்று அவர் கொடுத்துக்கொண்டிருக்கும் வெளிக்குரல் முகநூலில் வருகிறபோது பலருக்கும் சந்தேகங்களை எழுப்பிவிடக்கூடியதாக தேர்ந்த சொற்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குரல் தனிநபர் விருப்பு வெறுப்புச் சார்ந்தது. வஞ்சனை மிக்கது.

Read the rest of this entry »  • Sivashankar.A.S.Bala: மிகவும் நல்ல பதிவு... தீவிரவாத வன்முறைகள், கொடுமைகள் என்
  • Suthakaran.G: http://anupoothy.blogspot.ch/2015/01/blog-post_18.html மனிதம் குழு மீதும் தோழர் ரவி மீது
  • Bunni: திரு அசோக் அவர்களுக்கு ! நான் சார்ந்திருந்த மனிதம் குழு